கொலிவுட்டில் ஆச்சரியங்கள் என்ற புதியதொரு படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் ஹர்ஷவர்தன்.
இவர் சமீபத்தில் உலகநாயகன் கமலை சந்தித்து, தனது படத்தின் ட்ரைலரை காண்பித்து பாராட்டு வாங்கியதை மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து இயக்குனர் ஹர்ஷவர்தன் கூறியதாவது, 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கமல் பிலிம்சும் IIT CHENNAI யும் சேர்ந்து நடத்திய திரைக்கதை எழுதுவது பற்றிய கலந்து கொண்ட மாணவர்களுல் நானும் ஒருவன்.
அங்கே கடைசி நாளன்று பேசிய திரு.கமல்ஹாசன் அவர்கள் 30 ஆண்டுகளாக நான் விரும்பும் சினிமாவை இயக்க ரத்தம் சிந்தி வருகின்றேன். இனியும் சிந்த தயாராக இருக்கிறேன் என்று பேசியது என்னை நிறைய யோசிக்க வைத்தது.
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வேண்டிய பொறுப்பு என் போன்ற புது இயக்குனர்களுக்கும் உண்டு என அன்றிலிருந்து நம்பத்தொடங்கினேன்.
இந்நிலையில் தற்போது ஆச்சரியங்கள் என்ற படத்தை எழுதி, இயக்கி தயாரித்து முடித்துள்ளேன்.
முதல் படத்திலேயே வித்தியாசமான கதையோடு களமிறங்கியிருக்கின்றேன். பரபரவென்று ஓடும் திரைக்கதையில் பாடல்கள் அவசியமில்லை என்று தோன்றியதால் பாடல்கள் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறேன்.
இந்த படத்தின் ட்ரைலரை கமல் அவர்களிடம் காண்பிக்க ஆசைப்பட்டேன்.
கமலுடன் சந்திப்பு: தனது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவன் எடுத்திருக்கும் சினிமா என்பதால் கமல் என்னைப் பார்க்க சம்மதித்தார். அன்று, உலக நாயகன் அவர்களிடம் என் படத்தின் ட்ரைலரை காண்பித்தேன்.
அப்போது என் படத்தின் ட்ரைலர் அவரை வெகுவாக கவர்ந்தது. படத்தின் கதை குறித்து சிறிது நேரம் பேசினோம். நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை என்பதால் இது கமலுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பின்னர் சில அறிவுரைகள் கூறி என்னை வாழ்த்தி அனுப்பினார் என்று இயக்குனர் கூறியுள்ளார்.



|