Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவில் கலக்கிய அன்னையர்கள்!!!

"அம்மா" இந்த ஒரு சொல் இல்லை என்றால் இந்த உலகத்தில் "அன்பு" என்ற சொல்லே இல்லாமல் போயிருக்கும். இவ்வுலகில் நம்முடன் பழகும் ஒவ்வொருவரும் ஏதோ எதிர்பார்ப்புடன் தான் பழகுகிறார்கள்.

ஆனால் எந்தவித எதிர் பார்ப்பும் இல்லாமல் நம்மிடம் அன்பு காட்டும் ஒரே ஜீவன் "அம்மா" தான். நாம் வேலைக்கு போனாலும் சரி, வீட்டிலே இருந்தாலும் சரி ஒவ்வொரு நிமிடமும் நம்மை பற்றியே கவலை பட்டு கொண்டு இருக்கும் ஓர் உயிர்.

வீட்டில் மட்டும் இல்லை, வெளி உலகில் நம்முடன் பழகும் எல்லோரிடத்திலும் அன்பாக பழகும் நாம், ஆனால் "உனக்கு வேற வேலையே இல்லையா மா! உன் வேலைய பாத்துகிட்டு போ மா! ஏன் என் உயிரை வாங்குற! என்று எப்போதும் நம்மிடம் திட்டு வாங்கி கொண்டு மீண்டும் தன் பிள்ளை வாழ்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் நமது "அம்மா"க்களுக்கு நம் "சினி உலகம்" சார்பாக அன்னையர் தின வாழ்த்துகளை சொல்லி விட்டு தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களாக வாழ்ந்தவர்களை பற்றி "அன்னையர் தின" ஸ்பெஷல்லாக இன்று பார்ப்போம்.

சரண்யா:

தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு தமிழ் சினிமாவில் அம்மா என்றால் அனைவரின் கவனத்திற்கும் முதலில் வருவது இவர் தான். உயர்தர நடிகர்கள் அஜித் முதல் தற்போது கலக்கி கொண்டு இருக்கும் விஷ்ணு, விஜயசேதுபதி வரை அம்மாவாக நடித்தவர். குறிப்பாக இவர் நடித்து, இல்லை அம்மாவாக வாழ்ந்த படங்கள் "எம் மகன்", "கீரிடம்", நீர்பறவை", "ராம்”, "தென்மேற்கு பருவக்காற்று" என அடுக்கி கொண்டே போகலாம்.

அதுவும் "தென்மேற்கு பருவகாற்று" படத்தில் நடித்தற்காக அந்த வருடத்தின் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. "குட்டிபுலி" படத்தில் தன் மகனை கொல்ல நினைக்கும் விரோதியை தானே கத்தியால் குத்தி கொலை செய்து அனைவரின் கண்ணுக்கும் தெய்வமாக தெரிந்தவர்.

இதற்கு நேர் மாறாக "ஒரு கல் ஒரு கண்ணாடி"யில் தன் மகனை இந்த பொண்ண காதலிடா..என்று சொல்லும் அளவுக்கு கலகல அம்மாவாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்தார், இவர் மேலும் பல படங்களில் இது போன்று நல்ல கதாபாத்திரங்கள் செய்ய "சினி உலகம்" சார்பாக வாழ்த்துக்கள்.

ஸ்ரீ வித்யா:

இவர் பல படங்களில் பல நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து இருந்தாலும் "தளபதி" படத்தில் இவர் நடித்ததை யாராலும் மறக்க முடியாது. சின்ன வயதில் தெரியாமல் நடந்த தவறால் பெற்ற பிள்ளையை ரயில் வண்டியில் வைத்து அனுப்பிவிட்டு ஒவ்வொரு நாளும் அக்குழந்தைக்காக தினமும் அழுது ஏங்கும் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார். அதுவும் இளையராஜாவின் இசையில் "சின்ன தாயவள்" என்ற பாடல் ரஜினியின் பரிதவிப்பும், அது தெரியாமல் தன் பிள்ளைக்காக கடவுளிடம் வேண்டும் காட்சியில் கல் நெஞ்சையும் கரைத்து விடுவார்.

பண்டேரி பாய்:

தமிழ் சினிமாவில் இவரை எத்தனை பேருக்கு தெரியும் என்றால் விடை கேள்விகுறி தான். ஆனால் "மன்னன்" படத்தில் இவர் தான் ரஜினியின் அம்மா என்று சொன்னால் உடனே அனைவருக்கும் தெரிந்து விடும். உடலில் வாதம் ஏற்பட்டு கை, கால் வராமல் இருக்கும் தாயாக ஒவ்வொரு கட்சியிலும் நம்மை கண்ணிர் விட வைத்தவர். கவிஞர் வாலி அவர்களின் வரியில் "அம்மா என்று அழைக்காத உயிரில்லையே" என்ற பாடல் இன்று வரை ஒவ்வொருவரின் மனதிலும் ஒலித்து கொண்டு தான் இருக்கிறது.

சுஜாதா:

இவரும் ரஜினி, அஜித், விஜய் என அனைவருக்கும் அம்மாவாக நடித்து எல்லோர் மனதிலும் நீங்காத இடத்தை பெற்றவர், சாதாரண மனிதர்கள் அனைவரும் விரும்பும் அம்மாவாக தான் இவர் திரையில் தோன்றுவார்.

மென்மையான பேச்சு, அமைதியான முடிவு, பணிவான குணம் என அனைவரையும் கவர்ந்தார். "உழைப்பாளி", "அருள்", "அட்டகாசம்" போன்ற படத்தில் இவர் நடித்திருந்த விதம் இன்று வரை ரசிக்கபடுகிறது.

நதியா:

இவர் அம்மாவாக நடித்த ஒரே படம் "எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி" மட்டும் தான். ஆனால் இன்று வரை இளைஞர்கள் விரும்பும் அம்மாக்களின் வரிசையில் நிற்கிறார். தன் மகனுக்காக தானே காதலை சொல்வதிலிருந்து, மகன் சாப்பிட்டால் தான் தானும் சாப்பிடுவேன் என்று குழந்தை போல் அடம்பிடிப்பது வரை நம்மை அன்பாலேயே அரவணைத்தவர்.

இப்படி தான் என் அம்மா இருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் நினைப்பதுண்டு. இவர் இப்படி பட்ட கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக தான் உள்ளது.

ஆனால் என்ன தான் சினிமாவில் நம்மை கவர்ந்து இருந்தாலும், இப்படி தான் அம்மா வேண்டும் என்று நினைத்தாலும் என்றுமே நமக்கு நம் அம்மாவே சிறந்தவர்கள்!!!