Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவில் கலக்கிய அப்பாக்கள்! தந்தையர் தின ஸ்பெஷல்!

உலகத்திலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தன் முதல் ரோல் மாடல் யார் என்றால் கண்டிப்பாக அவர்கள் சொல்வது தன் தந்தையை தான், நாம் வாழ்வில் ஒரு நிலைக்கு வரும் வரை நம்மை நெஞ்சில் சுமந்து, நமக்கு எது சரி, எது தவறு என்று பார்த்து பார்த்து செய்து, கடைசி காலத்தில் நம்மிடம் திட்டுவாங்கி கொண்டோ அல்லது முதியோர் இல்லத்திலோ வாழ்ந்து வரும் அப்பாவி ஜீவன்களுக்கு தந்தையர் தின வாழ்த்துகளை சொல்லிக்கொண்டு தமிழ் திரையுலகில் அப்பாவாக நடித்து இல்லை வாழ்ந்து வந்த கதாபாத்திரங்களை பற்றிய தொகுப்பு தான் இந்த பகுதி.

1) தவமாய் தவமிருந்து

இன்றும் சரி, இதற்கு பிறகும் சரி யாரும் இந்த அளவிற்கு ஒரு உண்மையான, நேர்மையான அப்பா-மகன் உறவை சொல்லியிருக்க முடியாது. ஒரு சின்ன அச்சகத்தை வைத்து கொண்டு தன் மகன்கள் ஆசைபட்டதையெல்லாம் செய்து கொடுத்து, அவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டுவந்தும் இன்னும் தன் பிள்ளைகளை நல்ல இடத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் மரண படுக்கையில் இருப்பார் ராஜ்கிரண். இவரின் நடிப்பை பார்த்து அழாதவர்கள் கண்டிப்பாக உயிரற்ற ஜடமாகத் தான் இருந்திருக்க முடியும். இன்றும் நம் மனதில் அப்பா என்றால் முதலில் நினைவுக்கு வருவது இவர் தான்.

2) வாரணம் ஆயிரம்

தமிழ் சினிமாவில் ஏ சென்டர் ஆடியன்ஸின் விருப்பமான தந்தை யார் என்றால் கண்டிப்பாக இந்த படத்தில் வரும் அப்பா தான். இதில் சூர்யாவே அப்பாவாகவும், மகனாகவும் நடித்திருப்பார், பெரும்பாலும் இதில் இயக்குனர் கௌதம் தன் அப்பாவின் சாயல் இருக்கவேண்டும் என்பதற்காக கடுமையாக மெனக்கட்டதாக சொல்லியிருந்தார். தன் மகனிடம் காதலை பற்றி விசாரிப்பதிலிருந்து, அவன் காதல் தோல்வி வரை ஒரு தோழனாக பயணித்து இருப்பார். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் எல்லோரும் விரும்பும் ஒரு அப்பர் மிடில்கிளாஸ் அப்பாவாக வாழ்ந்திருப்பார்.

3) கீரிடம்

மறுபடியும் இதிலும் அப்பாவாக கலக்கியிருப்பார் ராஜ்கிரண். தன் மகனை எப்படியாவது போலிஸாக்கி பார்க்க வேண்டும் என்று துடிக்கும் ஒரு சாதரண காவல்துறை அதிகாரியாக நம் கண்முன் தெரிந்தார். ஆனால் தன் அப்பாவிற்காக மகன் எடுக்கும் முடிவு அவன் வாழ்க்கையை பாதித்தை எண்ணி இவர் வருந்தும் இடத்தில் யதார்த்தத்தின் உச்சத்தை தொட்டிருப்பார். இறுதியாக தன் மகன் இந்த வேலைக்கு தகுதியில்லை என்று அவரே கடிதம் கொடுக்கும் காட்சியில் ஒரு கண்ணியமான தந்தையாக வாழ்ந்து காட்டினார்.

4) காதலன்

இவர் தான் அப்பாக்களாக நடித்த எல்லோரையும் விட அனைவருக்கும் பிடித்த தந்தையாக இன்று வரை இருந்து வருகிறார். தன் மகனுக்கு ஒரு கவலை என்றவுடன் கையில் பீருடன் வந்து தன் மகனை குடிக்க சொல்லி அவன் மனக்கவலையை கேட்டு அதற்கு ஏற்ற புத்திமதியை சொல்வார். உனக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால், அதற்காக உண்மையாக இரு அது உன்னை தேடி வரும், சந்தோஷமோ, துக்கமோ 5 நிமிடம் தள்ளிப்போடு எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று சொல்லி, எல்லா குடும்பத்தாரும் விரும்பும் மார்டன் அப்பாவாக வாழ்ந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.

5) தங்கமீன்கள்

’மகள்களை பெற்ற அப்பாவுக்கு தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று’ ஒரே வசனத்தில் நம் எல்லோரையும் கவர்ந்தவர் இயக்குனர் ராம். இதுவரை நம் பார்த்த தந்தைகள் எல்லாம் மகனின் மீதுள்ள பாசத்தை மட்டும் தான் காட்டியிருப்பார்கள், ஆனால் அப்பா-மகள்களுக்காக உறவை செதுக்கியவர் ராம், இதற்கு முன்பு அபியும் நானும், தெவத்திருமகள் வந்திருந்தாலும் இவர் அளவிற்கு இதன் ஆழத்தை யாரும் காட்டியதில்லை என்பதே உண்மை. இப்படம் ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்தாலும் பின் நடந்து முடிந்த எல்லா திரைப்பட விழாக்களிலும் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் மட்டும் இல்லை நம் தந்தை கூட நமக்காக இப்படி தான் வாழ்ந்து கொண்டிருப்பார், ஆனால் நம்மில் எத்தனை பேர் தந்தையர் தின வாழ்த்துகளை சொல்லியிருப்போம், பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் சொல்லி பெருமைபட்டு கொண்டிருக்கும் இச்சமயத்தில் உங்களிடம் என்றும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை, இருந்தாலும் ஒரு முறை சொல்லி பாருங்கள்..உலகத்தில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும் ’சினி உலகம்’ சார்பாக தந்தையர் தின வாழ்த்துக்கள்.