Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு பொய்யாவது சொல் என் கண்ணே - பகுதி 21

சஹானாவுக்கு இருப்பே கொள்ளவில்லை, ஹோட்டலை சுற்றி சுற்றி வந்தாலும் அவள் கண்கள் ஏனோ ஆதித் இருக்கும் இடம் தான் தேடியது. மனதுக்குள் அவனை நன்றாக தீட்டித் தீர்த்துக்கொண்டாள். அவனை வெறுக்க எல்லாவித காரணங்களையும் பட்டியல் போட்டாள், வெற்றியும் பெற்றாள். ஆனாலும் மறு நிமிடம் ஆதித் அவள் எதிரே எதிர்ப்பட்டால் அவள் இதயம் படபடக்க தொடங்கியதை மட்டும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

யதுஷனும் நோரா தன்னை புறக்கணிப்பதை கண்டு கொண்டததினால் மிகுந்த ஏமாற்றத்துடன் வலம் வந்தான். நிறுவனத்தில் நோரா எந்த வேலையாக இருந்தாலும் யதுஷனிடமே வந்து நிற்பாள். யதுஷனும் நோராவின் புன்னகை ஒன்றுக்காகவே அவளது அத்தனை பணிகளையும் தானே முன்னின்று செய்து முடிப்பான். நோரா மனம் மகிழ்ந்து யதுஷனிடம் வந்து பலமுறை நன்றி சொல்லும்போது அவன் அடையும் சந்தோஷத்துக்கு அளவே இருப்பதில்லை.

ஆனால் இங்கு சுவிஸ் நாடு வந்ததிலிருந்து நோரா ஆதித்தின் பின் மாத்திரமே சுற்றிக்கொண்டு இருந்தாள். யதுஷனை பெரிதாக கணக்கெடுக்கவேயில்லை. சஹானாவும் ஆதித்தைப் பார்த்து புன்னகைத்து கொண்டு இருந்தமை அவனை மேலும் சினமடைய வைத்தது. எப்படியாவது ஆதித்தின் மனதை நோக பண்ண வேண்டும் என்று அவனுக்கு ஒரு வித வெறியே ஏற்பட்டது.

ஆதித் தன் பெரியம்மா மகன், தனக்காக எத்தனையோ உதவிகளை செய்தவன் என்றதை அவன் அந்நேரம் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. ஆதித்தின் மேல் அவன் கொண்ட பொறாமை அவன் கண்களை மறைத்தது.

ஆதித் சஹானா மேல் நாட்டம் கொண்டிருக்கிறான் என்பதை யதுஷன் ஏற்கனவே கண்டுகொண்டான். அவன் சஹானாவை நோக்கும் பார்வைகளை சஹானாவை தவிர மற்றவர்கள் புரிந்து வைத்திருந்தனர். யதுஷன் யோசித்தான், சஹானா என் நண்பி, அவள் குணங்கள், அழகு எல்லாம் எனக்கு தான் பொருந்தும். நானே அவளை திருமணம் செய்த்துகொள்ள கேட்டால் என்ன என்று அவனுக்கு தோன்றியது. சஹானாவை எப்படியாவது எனக்கு துணையாக்கிக் கொண்டால் நிச்சயம் ஆதித் மனம் வருந்துவான். மிகுந்த ஏமாற்றத்துக்கும் ஆளாவான். அதுவே அவனுக்குரிய தண்டனையாக அமையும். யதுஷன் மிக குரோதத்துடன் தீர்மானித்துக் கொண்டான்.

சஹானாவிடம் வந்து அவளுடன் மிக முக்கியமான விடயம் பேசவேண்டும் என்று அங்கேயிருந்த காபி லாஞ்சிற்க்கு அழைத்துச்சென்றான். அவளை அங்கே அமர வைத்து யதுஷன் மெதுவாகவே தொடங்கினான். இதோ பார் சஹானா, நாம் இருவரும் நல்ல நண்பர்கள். அதுமட்டுமின்றி நான் உன்னிடம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். உன்னை இதே ஹோட்டலில் அதுவும் ஆதித்தால் அவமானம் பட்டு நொந்து போயிருந்தபொழுது உன்னை வந்து கூட்டிப்போய் நல்ல வேலையும் பெற்று தந்தது நான் தான்.

நீ அடிக்கடி மனக்குழப்பத்திற்கு ஆளாகிறாய். உன்னை என்றும் நானே காப்பது என்று முடிவு செய்துவிட்டேன். அதாவது உன்னை நானே திருமணம் செய்தால் நல்லது என்று நினைக்கிறேன். எல்லாவிதத்திலும் நாம் இருவரும் பொருத்தமானவர்கள் தான். அதனால் நிச்சயம் சம்மதிப்பாய் என்று எனக்கு தெரியும். ஆகவே நாம் நாளை எல்லோருக்கும் எமது முடிவை சொல்லுவோம். என்ன சொல்கிறாய் சஹானா, இப்பொழுது உனக்கு மகிழ்ச்சி தானே என்று தொடர சஹானா அதிர்ச்சியுடன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தாள்.

தன்னை ஒருவாறு சுதாகரித்துக்கொண்டு, யதுஷன் நான் வந்து என்று தொடங்க என்ன இருவரும் காதலர்கள் மாதிரி ரகசியம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள், எனக்கு சொல்லமாட்டீர்களா? என்று நோராவின் குரல் இடையே புகுந்தது. யதுஷன் முகம் மலர அட, நோரா சரியான நேரத்தில் தான் வந்திருக்கிறீர்கள். எங்கள் இருவருக்கும் முதலில் வாழ்த்து கூறுங்கள். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளோம்.

நோரா சந்தோஷத்தில் கூச்சலிட்டாள், ஒரு மிக நல்ல செய்தியை கூறியுள்ளீர்கள். இந்த செய்தியை நாம் கொண்டாட வேண்டும். ஆதித்தை உடனே கூப்பிட்டு உங்கள் திருமண செய்தியை சொல்லவேண்டும் என்று உடனேயே ஆதித்தை உரக்க கூப்பிட்டாள்.

ஆதித் மற்றைய நிபுணர்களுடன் பேசிக்கொண்டு இருந்தாலும் நோரா மிக உற்சாகத்துடன் இவனை கூப்பிட அவன் மற்றவர்களுடன் இவர்களை நோக்கி வந்தான். என்ன நோரா இப்படி சந்தோஷத்தில் கூச்சலிடுகிறாய் என்ன அப்படி நல்ல செய்தி உனக்கு எட்டியுள்ளது எங்க எதுக்கு பார்ட்டி வைக்க போகிறாய்? என்று சிரித்தபடியே அவர்களை நெருங்கினான்.

ஆதித் உங்களுக்கு முன் நிற்கும் காதல் ஜோடிகளுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுங்கள். உங்கள் சின்னம்மா மகன் யதுஷன் சரியான கெட்டிக்காரன். அது மட்டுமின்றி மிக அப்பாவியாக காட்சியளித்த இந்த சஹானா எங்களுக்கு ஒருவருக்கும் தெரியாமலேயே யதுஷனை வீழ்த்தி விட்டாள். இவர்கள் இருவரும் திருமணம் செய்யப்போவதாக தீர்மானித்துள்ளார்கள். அதற்கு தான் பார்ட்டி ஆதித். நோரா சொல்லிக்கொண்டு போக ஆதித்தின் முகம் இருண்டு போனதை அங்கு நின்ற ஒருவருமே கவனிக்கவில்லை.

அடுத்த வாரம் தொடரும்

  • மீரா குகன்

ஒரு பொய்யாவது சொல் என் கண்ணே - பகுதி 20