Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைந்த ”ஞான ஒளி” சுந்தரம்- சிறப்பு கட்டுரை பல தகவல்களுடன்

சிறந்த கதை, வசன கர்த்தா, இயக்குனர், சீரியல் நடிகருமான ’வியட்நாம் வீடு’ சுந்தரம் மறைந்த துக்கத்தால் அவரது உறவுகளோடு, குடும்பமான திரையுலகமும் அவருடைய கலைப் பயணத்தால் கவரப்பட்ட ரசிகர்களும் கணகலங்கியுள்ளனர்.

இந்த நாளில் அவருடைய சாதனை பயணத்தை நினைவுகூர்வது அவருக்கான அஞ்சலியும் நமக்கான ஆறுதலும் ஆகும்.

சிவாஜியை கவர்ந்த கதையாளர்:

அமெரிக்க படையெடுப்பால் வியட்நாமே போர்க்களமாக காட்சியளித்தது, அதை ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் சண்டைக்கு ஒப்பிட்டு அந்த வீட்டுக்கு ‘வியட்நாம் வீடு’ என்று பெயர் வைப்பது போல, ஒரு தொடர்கதை எழுதினார்.

அது இதழிலும் வெளியானது, பிறகு, நாடகமாகவும் வடிவமைக்கப்பட்டது. பிறகு, சுந்தரத்தின் அபிமான நடிகரான சிவாஜிக்கும் கதை பிடித்துப் போக, 1970 ம் ஆண்டில் சிவாஜி நடிப்பில் படமும் வெளியானது. பெரிய வெற்றியும் பெற்றது. அதிலிருந்து ‘வியட்நாம் வீடு’ சுந்தரமாக தமிழக மக்களிடம் பிரபலமானார்.

சிவாஜி ரசிகர்களால் மறக்கவே முடியாத, சிறந்த நடிப்பாலும் திரைக்கதை அமைப்பாலும் நின்ற படம் ’ஞான ஒளி’ அதுவும் சுந்தரத்தின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா கண்ட கறுப்பு வெள்ளைப் படம்.

சிவாஜி, சுந்தரம் இருவருக்கும் மகுடத்தில் மேலும் ஒரு மணிக்கல்லாக அமைந்த படம் ’கௌரவம்’. இது படத்திற்கு இவர்கள் கொடுத்த பெயரா? அந்த படம் இவர்களுக்கு கொடுத்த பெயரா? என்பதுபோல அமைந்தது.

இதில், ஜூனியர் சிவாஜிக்குப் பதிலாக எம்.ஜி.ஆரை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. ஆனால், இரட்டை வேடங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருப்பதால், சிவாஜியே இரண்டு வேடங்களிலும் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என எம்.ஜி.ஆர். ஆலோசனை வழங்கிவிட்டார்.

மேலும், சிவாஜி ப்ரொடக்சன் படமான ‘அண்ணன் ஒரு கோயில்’ உட்பட சத்தியம், கிரஹப்பிரவேசம், ஜஸ்டிஸ் கோபிநாத், ஜல்லிக்கட்டு என 8 படங்களில் சிவாஜியோடு பணிசெய்திருக்கிறார்.

பெரிய நடிகர்களோடு சுந்தரம்:

எம்.ஜி.ஆர். படங்களில் ஒரு மாறுபட்ட குடும்ப படமான ’நான் ஏன் பிறந்தேன்’ சுந்தரம் எம்ஜிஆரோடு இணைந்த முதல் படம். அடுத்து அவர்கள் சேர்ந்த ’நாளை நமதே’ ஒரு நல்ல வெற்றிப்படமாக அமைந்தது.

மேலும், ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கே.ஆர். விஜயா, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி என பல பெரிய நடிகர்களுடைய படங்களுக்கும் திரைக்கதை, வசன கர்த்தாவாக பணிசெய்துள்ளார்.

பக்தி மற்றும் பலமொழிகளில்:

தேவிஸ்ரீ கருமாரியம்மன், நவக்கிரக நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், வேலுண்டு வினையில்லை போன்ற சமூக புராணப் படங்களுக்கும் எழுதியுள்ளார்.

தமிழில் சுந்தரத்தின் திரைக்கதையிலும் கே.ஆர்.விஜயா நடிப்பிலும் வெளியான ’நம்ம வீட்டு தெய்வம்’ தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் மறு ஆக்கம் செய்யும் மோகத்தை தூண்டிய, முதல் சமூக புராணப் படமாக அமைந்தது.

மேலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிப்படங்களிலும் தனது முத்திரையை பதித்துள்ளார்.

குறிப்பாக, 1978 ல் இவரின் திரைக்கதையில் சஞ்சய் குமார் நடித்து வெளியான, ’தேவதா’ ஹிந்திப்படம் தேசிய அளவில் புகழடைந்தது.

ஆரம்ப வாழ்க்கை:

1970 மற்றும் 80 களில் இந்திய திரைக்கதை உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சுந்தரம். திருச்சி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

1945 ம் ஆண்டு, காந்தியடிகளை மெட்ராஸ் தீவுத்திடலில் பார்ப்பதற்காக சுந்தரத்தை அவருடைய அம்மா அழைத்து வந்துள்ளார். சென்னை பிடித்துப்போகவே, 1955 ல் சென்னைக்கு குடியேறினர்.

அடிப்படையில் பெரிய கல்வி தகுதியில்லாத சுந்தரம். சிறுவயதிலே ’டன்லப்’ தொழிற்சாலையில் மிஷின் ஓட்டுபவராக வேலையில் சேர்ந்தார்.

பிறகு, ஒய்.ஜி. பார்த்தசாரதி நடத்திய ’ஐக்கிய தன்னார்வ கலைஞர்கள்’ அமைப்பில் கலை ஆர்வம் காரணமாக சேர்ந்தார்.

சுந்தரத்திற்கு, சிறுவயதிலே, தான் காணும் சம்பவங்களில் கொஞ்சம் கற்பனையை சேர்த்து சுவைபட சொல்லும் ஆற்றல் இருந்தது. இது அவருடைய நல விரும்பிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, கதை சொல்லும் ஆர்மாக வளர்க்கப்பட்டது.

இதன்மூலம், இவர் பார்த்தசாரதி பட்டறையில் தீட்டப்பட்டாலும் ஒரு கதைப் பணியாளராகவே பிறந்திருக்கிறார் என்பது புரிகிறது.

முதுமையில் நடிகர்:

இக்கால தலைமுறையினர் இவரை ஒரு சீரியல் நடிகராக மட்டும் பார்ப்பது யதார்த்தம்தான்.

’அப்பு’ உட்பட ஓரிரு படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். பிறகு, அவருடைய குணச்சித்திர முகமும் மெலிந்த தோற்றமும், வயதும் சீரியலில் நடிக்க பொருந்தியது.

சிவாஜி போன்ற பல நடிகர்களோடு பணிசெய்த அவருக்கு, நல்ல நடிப்பும் வருவது இயல்புதானே. அவர் மைடியர் பூதம் தொடங்கி, ரிஷிமூலம், கிருஷ்ணதாசி, மர்மதேசம், மெட்டிஒலி, அத்திப்பூக்கள், வள்ளி வரை 17 சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்:

வியநாம் வீடு படத்துக்காக 1970 ல் தமிழக அரசின் சிறந்த வசனகர்த்தாவுக்கான சினிமா விருது வழங்கப்பட்டது. 1991 ல் அறிஞர் அண்ணா விருதும் வழங்கப்பட்டது.

சமூக அக்கறையுள்ள நல்ல படைப்புகளை தந்த அவருக்கு இதன் மூலம் அஞ்சலி செலுத்துவோம்.

- மரு