Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உச்சியில் மறைந்த சூரியன் நா. முத்துக்குமார்

தமிழ் திரையுலகின் முதன்மை பாடலாசிரியர்களில் ஒருவராக இருந்து வந்த நா. முத்துக்குமார் இன்று காலை தனது 41 வது வயதிலே அகால மரணம் அடைந்துள்ளார்.

சில நாட்களாகவே காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

வேகமான வளர்ச்சி, நிலைத்த தொடர்ச்சி, திடீரென நின்று போன அதிர்ச்சி, என உச்சியில் மறைந்த சூரியனாகி இருக்கிறது அவருடைய வாழ்க்கைப் பயணம்.

இது தமிழுக்கும் திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் ஒரு இழப்பாக அமைந்தாலும் அவருடைய குடும்பத்துக்கு என்றுமே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்பதுதான் கண்ணீர் உகுத்தும் வேதனை.

கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், நாவலாசிரியர் என பலவிதமான எழுத்துப் படைப்புகளால் தமிழுலகின் உச்ச தளத்தில் உலாவியவர்.

வாழ்க்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரம் இவர் பிறந்து வளர்ந்த ஊர். இவர் நான்கு வயதிலே தாயை இழந்தவர். இவருடைய மகள் 8 மாதத்திலே புகழ்பெற்ற தன் தந்தையை இப்போது இழந்திருப்பது தலைமுறையாக தொடரும் வேதனை.

அவருக்கு தீபலஷ்மி என்ற மனைவியும் அந்த தம்பதிக்கு, ஆதவன் (9) என்ற மகனும் யோகலஷ்மி என்ற பெண்குழந்தையும் உண்டு.

திரைப்பயணம்

இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். இவருடைய எழுத்துக்களில் கவிதை நயமான கருத்துருவாக்கங்கள் காணப்பட்டதால், தனக்குள்ளே ஒரு சிறந்த பாடல் ஆசிரியர் இருப்பதை புரிந்து கொண்டு பாதையை மாற்றிக்கொண்டார்.

அந்த வகையில் இவருக்கு முதல் வாய்ப்பளித்தது இயக்குனர் சீமான் தான். அவர் இயக்கிய ’வீரநடை’ படத்தில்தான் இவருடைய முதல் பாடல் வெளியானது.

அதன்பிறகு, சந்திரமுகி, கில்லி, வெயில், காதல், கஜினி, அயன், காதல்கொண்டேன், நந்தா, சிவாஜி, தீபாவளி, அழகிய தமிழ்மகன், போக்கிரி, பில்லா2, சண்டைக்கோழி, வாரணம் ஆயிரம், ஆதவன், அங்காடித்தெரு, யாரடி நீ மோகினி, தெறி உட்பட 92 படங்களுக்கு ஹிட்டான பாடல்களை எழுதியிருக்கிறார்.

1995 முதற்கொண்டு 2016 வரையிலான தனது கலைப்பயணத்தில் 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அதில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் போன்றவர்களின் இசையில் அதிகம் எழுதியுள்ளார்.

இலக்கியங்கள்

சினிமா பாடல்களில் மட்டுமல்லாது ஒரு கவிஞராக, நாவலாசிரியராக தமிழ் இலக்கியத்திற்கு பல நூல்களை எழுதியிருக்கிறார்.

அவற்றுள் சில... ‘நியூட்டனின் மூன்றாம் விதி, ’பட்டாம்பூச்சி விற்பவன்’ போன்ற சிறந்த கவிதை தொகுப்புகளையும் ஆணா ஆவண்ணா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால காண்டம், குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

விருதுகள்

ரசிகர்களால் பாடல்கள் ஹிட்டாவதுதான் உண்மையான விருது என்றாலும், அரசுகளும் விருதுகள் தந்து அங்கீகரிப்பது அவர்கள் மகுடங்களில் மேலும் மணிகள் பதித்து அலங்கரிப்பதற்கு ஒப்பாகும்

அந்த வகையிலும், தங்க மீன்கள் படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்கும், ‘சைவம்’ படத்தில் ‘அழகே அழகே’ பாடலுக்கும் என இரண்டு முறை தேசிய விருது இவருக்கு கிடைத்தது.

’வெயில்’, ’சிவாஜி த பாஸ்’ ’கஜினி’, ’அயன்’, ’சிவா மனசுல சக்தி’ ஆகிய 5 படங்களுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசு விருதுகளையும் பெற்று ஒரு புகழான இடத்தில் இருந்தார்.

அவருடைய அகால மரணத்துக்கு நம் அஞ்சலியை உரித்தாக்கி ஆறுதல் பெறுவோம்.