Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரமுத்துவுக்கு கவிப்பேரரசு பட்டம் வந்தது எப்படி தெரியுமா?

தத்துவம், கொள்கை, யதார்த்தம், வார்த்தைஜாலம் என்ற வட்டத்துக்குள்ளே பெரும்பகுதி பயணித்துக் கொண்டிருந்த சினிமா பாடலை கவிதை நயத்துக்குள் செலுத்தி ரசிகர்களின் கைதட்டலையும் பெற்றவர் வைரமுத்து.

தன்னுடைய பிறந்த நாளை கவிஞர்களின் நாளாக கொண்டாடி, ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சிறந்த கவிஞர்களை தேர்வுசெய்து, கௌரவித்து பரிசும் வழங்கும் கவிப்பேரரசு வைரமுத்துக்கு இன்று பிறந்த நாள்.

ஒரு பள்ளி தமிழாசிரியர் ’அவன்’ ஆண்பால், ’அவள்’ பெண்பால், என இலக்கணம் நடத்திக்கொண்டிருந்தார். ஒரு மாணவன் குழந்தை எந்த பால்? என்று புரியாமல் கேட்டான். ஆசிரியர் திகைத்தார். அப்போது அங்கிருந்த மற்றொரு மாணவன் ’குழந்தை தாய்ப்பாலில் அடங்கும்’ என்றான்.

விளையும் பயிர் முளையிலே தெரியுமாறு விடைகட்டிய அந்த மாணவன் இப்போது தமிழ் விருட்சமாய் தளதளவென வளர்ந்திருக்கும் வைரமுத்துதான். தென்தமிழகமான தேனி மாவட்டத்தின் வடுகப்பட்டியில் பிறந்ததுதான் இந்த கவிதை கருப்பட்டி. அம்மி பொலிய சிற்பி எதற்கு என சினிமா பாடலில் இருந்து அப்துல் ரகுமான் ஒதுங்கினார். ஆனால், அம்மியிலே ஓவியத்தை பொலிந்தார் வைரமுத்து.

ஒரு மேடையில் எதார்த்தமாக வைரமுத்தை கவியரசர் கண்ணதாசனோடு ஒப்பிட்டு பேசிவிட்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அது தமிழகத்தில் ஒரு சூறாவளியையே ஏற்படுத்தியது.

அதனால், வைரமுத்துக்கு கவியரசு பட்டம் யார் கொடுத்தது என்று காட்டமாகவும் சிலர் விமர்சித்தனர். அதன் விளைவாக கவியரசு பட்டத்தை துறக்கிறேன் என்றும் வைரமுத்து அறிவித்தார். அவர் துறந்ததையும் கூட நாகரீகம் இல்லாமலே மீண்டும் விமர்சித்தனர். தமிழ் சான்றோர்களால் இந்த பிரச்சினை கூர்ந்து கவனிக்கப்பட்டது.

வலம்புரிஜான்

இந்த பிரச்சினைப் பற்றி மறைந்த இலக்கிய சித்தர் வலம்புரிஜான் தலைமையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கண்ணதாசன் பாடல் பெருமைகளையும் வைரமுத்து பாடலின் பெருமைகளையும் இரண்டு தரப்பாக சில கவிஞர்கள் பங்கேற்று முன்வைத்தனர்.

அதை முழுமையாக கேட்டுவிட்டு தீர்வாக வலம்புரிஜான் கூறியது, ஒரு சோகப்பாடலில் கண்ணதாசன் ’ஏன் அழுதாய் ஏன் அழுதாய், என்னுயிரே ஏன் அழுதாய்’ என்ற வரிகளை அவர் பாணியில் சாதாரணமாக எழுதியிருக்கிறார்.

அதே அழுகிற சூழலுக்கு அவருக்கு பிறகு வந்த வைரமுத்து ‘கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் என்ன நீர்க்கோலம்’ என்று ஒரு கவிதைநயமான வரிகளை எழுதியிருக்கிறார். என்று கூறினார்.

கருணாநிதி

வைரமுத்துவின் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ நூலை வெளியிட்டு, விழாவில் பேசிய, கலைஞர் கருணாநிதி (கண்ணதாசனுக்கும் நண்பராக இருந்தவர்), ’ஒரு மனிதன் யானையை தூக்கிவிட்டான் என்றால், யானையை தூக்கியதால்தான் அது சாதனையாக பார்க்கப்படுகிறது.

ரவிவர்மாவின் ஓவியத்தையும் இது விஞ்சிவிட்டது என்று சொன்னால், ரவிவர்மாவை குறைத்து மதிப்பிடுவது அல்ல. அவர் ஒரு இலக்காக இருக்கிறார் என்றே அர்த்தம். அதுபோலதான் இந்த பிரச்சனையும் என்று பேசியவர், முடிவாக வைரமுத்துவுக்கு கவிப்பேரரசு பட்டத்தை வழங்குகிறேன்’ என்று உரிய மரபைச் செய்தார். ஒரு தமிழக முதல்வராகவும் முதிர்ந்த தமிழறிஞராகவும் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வைரமுத்துவின் பாடல்களில் இளையராஜாவுடன் இருந்த காலம் திரைப்பாடல்களில் நல்ல வீரியமே இருந்தது எனலாம். அவர்கள் பிரிந்து ரசிகர்களை ஏங்க வைத்தனர், பிறகு ஏ.ஆர். ரகுமானோடும் ஒரு சிறந்த திருப்பத்தை ஏற்படுத்தினார்.

இதுவரை சினிமா பாடலுக்காக 6 முறை தேசிய விருதுகளை பெற்ற வைரமுத்து, பத்மஸ்ரீ பட்டத்தையும் பெற்றுள்ளார். அவருடைய இந்த பிறந்தநாளில் ரசிகர்களாக வாழ்த்துக்களை உரித்தாக்குவோம்.

மேலும் பல தகவல்கள் அறிய க்ளிக் செய்க