Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியையும், கமலையும் உருவாக்கிய பஞ்சு அருணாசலம் - தெரிந்திராத தகவல்கள்

தமிழ் திரையுலகில் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என்ற பன்முக திறமை கொண்ட எளிமையான மனிதர் பஞ்சு அருணாசலம் தனது 75 வது வயதில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

பஞ்சு அருணாசலத்தின் திரையுலகப் பணி 1965ல் தொடங்கியிருந்தாலும் 1975- 1980 களில் உச்சத்தில் இருந்தது எனலாம். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். 40க்கும் மேலான படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.

இவர் இயக்கிய படங்களைவிட, எழுதிய படங்கள், பெரும்பாலானவை பெரிய வெற்றி பெற்றன.

ஆரம்பகால வாழ்க்கை:

ஏ.எல்.எஸ் ஸ்டூடியோவில் ஷெட் போடுவதற்கான பொருள்கைளை எடுத்துக்கொடுப்பதும் பிறகு அதை சரியாக வாங்கி வைப்பதுமான ஒரு சாதாரண வேலையே இவருடைய ஆரம்ப கால வாழ்க்கை.

கண்ணதாசனிடம் உதவியாளர்:

அதன் பிறகு, கவியரசர் கண்ணதாசனிடம் பாடல் எழுதும் உதவியாளராக இருந்தார். அப்போது கண்ணதாசன் பாடல் எழுதிய புன்னகை, தேனும் பாலும், தாயைக்காத்த தனயன், பெரிய இடத்துப்பெண், ஆண்டவன் கட்டளை, பழனி போன்ற படங்களின் பிரபலமான பாடல்களுக்கு இவரது பங்களிப்பும் இருந்துள்ளது.

கண்ணதாசன் அப்போது நடத்தி வந்த ‘தென்றல்’ பத்திரிகையிலும் ’அருணன்’ என்ற பெயரில் சில கதைகள் பிரசுரமாயின.

பாடலாசிரியர்:

’பொன்னெழில் பூத்தது’ என்ற ’கலங்கரை விளக்கம்’ படப்பாடல் எம்.எஸ்.வியின் இசையில் இவர் எழுதிய காலத்தால் அழியாதது. மேலும், நானும் ஒரு பெண், அன்னக்கிளி, ஆறுலிருந்து அறுபதுவரை, தம்பிக்கு எந்த ஊரு, மாப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு ஹிட்டான பாடல்களை எழுதியுள்ளார்.

இளையதலைமுறை, என்னதவம் செய்தேன், நாடகமே உலகம், மணமகளே வா, புதுப்பாட்டு போன்றவை இவர் இயக்கிய படங்களில் குறிப்பிடத்தக்கவை. ஆறிலிருந்து அறுபதுவரை, கல்யாண ராமன், எங்கேயோ கேட்ட குரல், ஆனந்த ராகம், குருசிஷ்யன், மைக்கேல் மதன காமராஜன், வீரா, மாயக்கண்ணாடி போன்ற படங்கள் இவர் தயாரித்ததில் குறிப்பிடத்தக்கவை.

கதையிலே பெருஞ்சாதனை:

மயங்குகிறாள் ஒரு மாது, புவனா ஒரு கேள்விகுறி, வட்டத்துக்குள் சதுரம், கவரிமான், கல்யாண ராமன், ஆறிலிருந்து அறுபதுவரை, முரட்டுக்காளை, கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, எல்லாம் இன்பமயம், எங்கேயோ கேட்ட குரல், சகலகலா வல்லவன், பாயும்புலி, மண்வாசனை, தூங்காதே தம்பி

தூங்காதே, வாழ்க்கை என, இவர் எழுதிய கதைகள்தான் 1975-1980 களில் வெளியான பெரும்பாலான படங்களின் வெற்றிக்கு கதை என்ற கருவாக இவர் இருந்திருப்பது எல்லோருக்கும் விளங்கும்.

"என்னை அறிமுகப்படுத்தியது பாலசந்தராக இருந்தாலும், என்னை ஒரு கலைஞன் ஆக்கியது பஞ்சு அருணாச்சலம் தான்" என ரஜினியே பல முறை சொல்லியிருக்கிறார்.

இளையராஜாவை அறிமுகப்படுத்தினார்:

அவருடைய திறமைகளால் ஏற்பட்ட திரையுலக பயன் ஒரு புறம் இருந்தாலும், இளையராஜாவை கண்டெடுத்து அறிமுகப்படுத்தியதன் மூலம் அவர் தமிழ் திரையுலகிற்கு மகத்தான பணிசெய்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

அன்னக்கிளி(1976) படத்திற்காக, அப்போது ஒரு பிரபலமான பாடகி, இளையராஜா இசையில் பாட முன்வராத நிலையிலும் அந்த திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட சிலர் இளையராஜா முதன்முதலாக இசையமைப்பதை விரும்பாத நிலையிலும் அவருடைய திறமையை நன்கு உணர்ந்த திடத்தோடு இளையராஜாவை பஞ்சு அருணாசலம் அறிமுகப்படுத்தினார்.

அதன்மூலம், தமிழ் திரை இசையில் ஒரு புரட்சி ஏற்படுவதற்கு தூண்டுகோலானார் என்பதை தமிழுலகம் அறியும்.

ஒரு சாதனை பயணத்தை வழியனுப்பும் அஞ்சலியாக இந்த கட்டுரை உரித்தாக்குவோம்.

- மரு