Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கபாலி படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு

சென்னையை சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கபாலி திரைப்படத்தை பார்க்க சென்னை பிருந்தா தியேட்டருக்கு கடந்த ஜுலை 20ம் தேதி சென்றபோது ஒரு டிக்கெட் ரூ. 300க்கு நிர்வாகம் விற்றது.

ஆனால் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் ரூ. 50 தான். கபாலி படத்துக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 4 முதல் 5 மடங்கு அதிகமாக வசூலித்துள்ளனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி என். கிருபாகரன் விசாரித்தபோது, கபாலி படம் வெளியாவதற்கு முன்பே அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டிருந்தேன். அந்த உத்தரவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று அரசு வக்கீலிடம் கேட்டார். அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அரசு வக்கீல் பதிலளித்தார்.

இதற்கு நீதிபதி, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தது எல்லாம் சிறிய தியேட்டர்கள் மீது தான். அதிகாரிகள் பெரிய தியேட்டர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சினிமாக்காரர்களுக்கு மட்டும் என்ன தனிச்சட்டமா? பெரிய நடிகர்கள் நடித்த படம் என்றால் அனைத்து விதிகளும் மீறப்பட்டுவிடும்.

அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட அதிகம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து அவர்களது கருத்துகளை கேட்டு, டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவேண்டும். ரூ.120 டிக்கெட்டை ரூ.500, ரூ.700, ரூ.1,000 என்று விற்பனை செய்வது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும். அரசு அதிகாரிகளுக்கு மட்டும் தெரியவில்லையா?

எனவே, அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர் நிர்வாகம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று அரசு விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.