
மெஹந்தி சர்கஸ் தமிழ் சினிமாவில் சினிமா ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இயக்குனர் ராஜு முருகன் கதை, வசனத்தில் ராஜு சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
மெஹந்தி (ஸ்வேதா) பல ஊர்களில் சர்கஸ் போட்டு பிழைத்து வருபவர். அப்படி மெஹந்தி, ஹீரோ மதம்பட்டி ரங்கராஜ் ஊருக்கு செல்ல, ஹீரோவிற்கு மெகந்தியை பார்த்தவுடனே காதல் பற்றிக்கொள்கின்றது.
அதை தொடர்ந்து இளையராஜா பாடல்களே இவர்கள் காதலுக்கு வழி அமைத்து தர, பிறகு இருவரும் காதலிக்கின்றனர், ஆனால், இவர்கள் காதல் ஹீரோ, ஹீரோயின் அப்பாவிற்கு பிடிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் இவர்கள் ஓடிப்போக கூட முடிவெடுக்கின்றனர், அப்போது ஹீரோவின் அப்பா இவர்களை பிரிக்க, அதை தொடர்ந்து ஹீரோ தன் காதலியை தேடி ஒவ்வொரு சர்கஸிற்கும் செல்ல, கடைசியாக அவரை கண்டுப்பிடித்தாரா? இவர்கள் காதல் ஒன்று சேர்ந்ததா? என்பதே இந்த மெகந்தி சர்கஸ்.
படத்தை பற்றிய அலசல்
ராஜு முருகன் கதை என்றாலே எப்போதும் காதலுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும், அந்த காதல் உடல் சார்ந்து இல்லாமல், எப்போதும் மனது சார்ந்து இருக்கும், அப்படி ஒரு உணர்வூப்பூர்வமான மனதை சாந்த காதலை வடிவமைத்துள்ளார், அதை நன்றாக எடுத்தும் உள்ளார் ராஜு சரவணன்.
அதிலும் ஹீரோயின் அப்பா தன் மகளை நிற்க வைத்து 9 கத்திகளை சரியாக சுற்றி அடிக்க வேண்டும் என்று சபதம் போட, அதற்கு ஹீரோ எடுக்கும் ட்ரெயினிங், அதை கிளைமேக்ஸில் கொண்டு வந்த விதம் என செம்மையான ரசனையுடன் காட்சிப்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி ஹீரோ ஒவ்வொரு சர்கஸ் தேடிசெல்லும் போது வரும் எதிர்ப்பாராத டுவிஸ்ட் மனதை பாராமாக்கின்றது. படத்தின் மிகப்பெரும் பலம் வசனங்கள் தான். சர்கஸில் வேலைப்பார்க்கும் குள்ளமாக இருக்கும் ஒருவர் ‘ஆள் தான் இப்படி, ஆனால், இதயம் எல்லோரும் ஒன்னு தான்யா’ என்று பேசுவதெல்லாம் கவர்கின்றது.
ஷான் ரோல்டன் படத்திற்கு படம் தன் இசையால் மனதை கொள்ளை கொள்கின்றார், படத்தில் அத்தனை பாடல்கள் வந்தாலும் எதுவுமே அலுப்பு தட்டவில்லை, அதைவிட இளையராஜா பாடலை பயன்படுத்திய விதம் சூப்பர். யுகபாராதியின் வரிகள் இன்னும் சில நாட்களுக்கு மனதை விட்டு நீங்காது.
க்ளாப்ஸ்
படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர்.
படத்தின் வசனம் மற்றும் இசை.
பல்ப்ஸ்
கொஞ்சம் மெதுவாக செல்லும் திரைக்கதை, காமெடி காட்சிகள்
மொத்தத்தில் அழகிய காதலை பார்க்க இந்த மெஹந்தி சர்கஸிற்கு விசிட் அடிக்கலாம், அதை விட இளையராஜா ரசிகர்களுக்கு விருந்து.