
தமிழ் சினிமாவில் ஒரு நல்ல ஹாரர் படம் வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. ஹாரர் என்றாலே பயந்த காலம் போய் தற்போது காமெடி படங்களாக தான் பேய்களே வந்து செல்கின்றது, அந்த வகையில் அவள் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ஹாரர் ஜானர் படமாக வந்துள்ள இருட்டு திகிலூட்டியதா? பார்ப்போம்.
கதைக்களம்
ஓர் ஊரில் பகல் 12 மணிக்கு திடீரென்று இருட்டாகிறது. அதை தொடர்ந்து அந்த இருட்டு போவதற்குள் 6 பேர் இறக்கின்றனர்.
இந்த கேஸை விசாரித்து வரும் போலிஸும் தற்கொலை செய்துக்கொள்ள அந்த கேஸை விசாரிக்க சுந்தர்.சி அவருடைய குடும்பத்துடன் வருகிறார்.
அவர் அந்த ஊருக்கு வந்த பிறகு அவருடைய வாழ்க்கையிலேயே சில அமானுஷிய விஷயங்கள் நடக்கின்றது, இதற்கெல்லாம் காரணம் என்ன, எப்படி அவர்கள் இறந்தார்கள், ஏன் கொல்லப்பட்டார்கள் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
சுந்தர்.சி நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். இந்த முறை வெறுமென காமெடி, சண்டை, பாட்டு என்றில்லாமல் ஒரு த்ரில்லர் கதையம்சத்தை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடித்துள்ளார்.
துரை தமிழ் சினிமாவில் முகவரி, தொட்டிஜெயா, 6 கேண்டில்ஸ் போன்ற நல்ல படங்களை கொடுத்தவர், கொஞ்ச நாட்களாக இவர் தடுமாற இந்த முறை ஹாரர் என்ற ஜானரை எடுத்து அதை சிறப்பாகவும் எடுத்துள்ளார்.
பேய் படம் என்றாலே நமக்கு 1000 ரெபரன்ஸ் இருக்கு, ஸ்லோ மோஷனில் ஜன்னலை காட்டினால் 'இப்ப பாரு ஒருத்தே முகத்தை காட்டி பயமுறுத்துவான்' என்று கமெண்ட் அடித்துவிடுவார்கள். அவையெல்லாம் இந்த படத்தில் இருந்தாலும் எடுத்துக்கொண்ட கதைக்களம் கவர்கிறது.
இதுநாள் வரை பேய் என்றாலே இறந்துவிடுவார்கள், பழி தீர்ப்பார்கள் என்று தான் வரும், இதிலும் அப்படி என்றாலும் இதுவரை இந்திய சினிமா கண்டிராத ஜின் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தி அந்த கதையை கடைசி வரை சஸ்பென்ஸாக வைத்திருந்து கொண்டு சென்றது புத்திசாலித்தனம்.
அதே நேரத்தில் கான்ஜுரிங், இன்சிடிஸ் என்ற நாம் பார்த்த பல ஹாலிவுட் படங்கள் நியாபகம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை, அதிலும் கிளைமேக்ஸ் அப்படியே கான்ஜுரிங் இரண்டாம் பாகத்தை பார்த்தது போல் உள்ளது.
படத்தில் முதல் பாதியில் தேவையில்லாத இடங்களில் ரொமான்ஸ் காட்சிகள் வந்து செல்லும், அட இப்ப எதற்குடா இது என்றாலும், அதை வைத்து காட்சிகளை நகர்த்தியது அந்த ரொமான்ஸ் காட்சிகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம்.
கிரிஷின் இசை படத்தின் ஆரம்பத்தில் பேய் படம் என்பதற்காக இஷ்டத்திற்கு இருந்தாலும், அரேபிக் சம்மந்தமான காட்சிகளில் வரும் இசை அருமை.
க்ளாப்ஸ்
புதுவிதமான பேய் கான்செப்ட் எடுத்த விதம்.
கடைசி வரை அது என்ன, என்ன என்று கேட்க வைப்பது.
படத்தின் ஒளிப்பதிவு, இத்தனை அழகான மலை பிரதேசத்தை கண்முன் காட்டிய விதம்.
பல்ப்ஸ்
புது கான்செப்ட் என்றாலும் பல ஹாலிவுட் படங்களில் பார்த்த காட்சிகள் போல் இருக்கின்றது.
மொத்தத்தில் இருட்டு கண்டிப்பாக உங்களை பயமுறுத்தும். டீசண்ட் ஹாரர் மூவி.