Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

"அஜித்", "கே.வி.ஆனந்த்", "தனிப்பட்ட வாழ்கை" மனம் திறக்கும் "சுபா"!!

பிரபல எழுத்தாளர்களும், திரைக்கதை ஆசிரியர்களுமான சுபா அவர்களுடனான ஒரு சிறப்பு பேட்டி.

"சுபா" பெயர் காரணம்?

"நிறைய பேர் எங்களை ஒருவர் என்று தான் நினைத்து கொண்டு இருக்கின்றனர், இல்லையெனில் யாரோ?? பெண் என்று நினைக்கின்றனர். சுரேஷ்-பாலா என்பதன் சுருக்கமே இந்த "சுபா".

உங்கள் நட்பு பற்றி?

நாங்கள் இருவருமே கதை எழுத கூடிய திறமை உள்ளவர்கள் தான், ஆனால் தனித்தனியாக எழுதி பெயர் வாங்க விரும்ப வில்லை. ஒருவருடைய எமோசன் மற்றவருடைய மூளை, இப்படி சேர்ந்து தான் கதை எழுத ஆரம்பித்தோம். இதுவே எங்களை இன்று வரை கொண்டு செல்கிறது.

எழுத்தாளர் ஆவதற்கு முன்?

நானும், இவரும் ஒரு தனியார் பேங்க்கில் வேலை பார்த்து கொண்டு இருந்தோம். அப்போதே நாங்கள் இருவரும் சேர்ந்து கதை எழுத ஆரம்பித்து விட்டோம், இன்றும் எழுதுகிறோம், நாளையும் எழுதுவோம்.

உங்களுக்குள் "ஈகோ" வந்துருக்கா?

அது இல்லாமல் எப்படி, கண்டிப்பாக இருக்கும். ஆனால் எந்த விதத்திலும் இது எங்கள் நட்பை பாதிக்காது, வேண்டுமானால் எங்கள் கதையை பாதிக்கலாம். நான் ஒன்று சொன்னால் இவர் இப்படி பண்ணலாம் என்று சொல்வார் இறுதியாக அது ஒரு தரமான கதையை தான் தரும்.

சினிமாவுக்கு வந்தது பற்றி?

நாங்கள் இருவரும் வேலையில் இருந்த போதே இயக்குனர் பாக்யராஜ் அவர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் எங்கள் கதைகளை படித்துள்ளார், அவருடன் சேர்ந்து கதை விவாதங்களில் ஈடுபடுவோம். பின்பு 1997ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய "நாம் இருவர் நமக்கு இருவர்" படத்தில் வசனம் எழுத வாய்ப்பு வந்தது.. அது தான் நாங்கள் சினிமாவில் காலடி எடுத்து வைத்த தருணம்.

கே.வி.ஆனந்த் நட்பு ?

நாங்கள் தொடர் எழுதிய பத்திரிகையில் தான் அவரும் புகைப்பட கலைஞராக வேலை பார்த்தார். அப்போது ஏற்பட்ட நட்பு தான் சினிமா வரை எங்களை கொண்டு சென்றது.

"ஆரம்பம்" கதை எழுதிய அனுபவம்?

"பில்லா" படத்திற்கு பிறகு விஷ்ணுவர்தனுடன் நாங்கள் இணைந்து "பில்லா 2" செய்வதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் செய்ய முடியாமல் போனது, பின்பு அவரே போனில் அஜித் சாரிடம் படம் பண்ணுவதாக சொன்னார், அதற்கு நீங்கள் தான் கதை எழுத வேண்டும் என்று சொன்னார். அதற்கு பிறகு உருவானது தான் "ஆரம்பம்".

அஜித் கதையை கேட்டு என்ன சொன்னார்?

அஜித் சார் முதலில் போனில் தான் பேசினார், அவர் "சார் நான் அஜித் பேசுறேன்", சொல்லிட்டு முதல் வார்த்தையே "சூப்பர் ஸ்டோரி சார், எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு, நான் எந்த சீனையும் என்னால் வேணாம்னு சொல்ல முடில, ஐ லைக் சோ மச் சார்" என்று தான் கூறினார், அஜித் எப்போதும் ஸ்மார்ட் அண்ட் ஜென்டில்மேன் தான். மேலும் அவர் நல்ல மனிதாபிமானம் உள்ளவர் எல்லோரையும் மதிக்க தெரிந்த ஒரு மனிதர்.

கதை இன்ஸ்பிரேசனில் உருவாகுவது பற்றி?

கண்டிப்பாக அதில் எந்த தவறும் இல்லை, இந்த உலகத்தில் யாருமே கிரியேட்டர் இல்லை, எல்லாமே இன்ஸ்பிரேசன் கொண்டு தான் உருவாக்கப்படுகிறது, ஆனால் அதிலும் ஒரு நேர்மை வேண்டும்.

நாவல் சினிமாவாக எடுப்பது நல்லதா?

கண்டிப்பாக..அப்போது தான் புது புது விஷயங்கள் சினிமாவில் செய்ய முடியும், கற்பனை திறன் வளரும். உறுதியாக சொல்கிறேன் சினிமாவின் எதிர் காலம் நாவல்கள் கையில் தான் உள்ளது.

இந்த ஒட்டி பிறக்காத இரட்டையர்களின் வெற்றி பயணம் தொடர "சினி உலகம்" சார்பாக வாழ்த்துகள்.