Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாபி சிம்ஹா நடித்துள்ள 'வெள்ள ராஜா' - வெப் சீரிஸ் விமர்சனம்

ஜிகர்தண்டா படத்தில் மாஸான கேங்ஸ்டராக நடித்த நடிகர் பாபி சிம்மா தற்போது அதே பாணியில் கொடூர டானாக நடித்துள்ள 'வெள்ள ராஜா' வெப் சீரிஸின் முதல் சீசன் வெளிவந்துள்ளது. பார்வதி நாயர், காயத்ரி, காளி வெங்கட், யூதன் பாலாஜி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இந்த வெப் சீரியல்? வாங்க பார்ப்போம்..

கதை:

பல கதாபாத்திரங்கள், பல கதைகள் - அவர்கள் அனைவரும் ஒரு சமயத்தில் ஒரு இடத்தில் பெரிய ரௌடியிடம் மாட்டினால் எப்படி இருக்கும் என்பது தான் 'வெள்ள ராஜா' ஒன் லைன் கதை.

சென்னையில் பல குற்றங்களுக்கு காரணமான போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை அடியோடு ஒழிக்க முயற்சிக்கும் போலீஸ் அதிகாரி தெரசா (பார்வதி நாயர்). சென்னைக்கு ட்ரான்ஸபரில் வரும் அவர் தேவா(பாபி சிம்மா)வை பிடிக்க ஸ்கெட்ச் போட ஆரம்பிக்கிறார்.

வறுமை காரணமாக போதைப்பொருள் விற்கும் தொழிலுக்கு வந்த தேவா ஒரு சமயத்தில் அவர் முதலாளியிடம் பிரச்சனை ஏற்பட, அதில் இருந்து தப்பிக்க முதலாளி கேங்கை தீர்த்து கட்டி பெரிய ரௌடியாக மாறுகிறார். பின்னர் தலைமறைவாகி ஒரு லாட்ஜ் நடத்திக்கொண்டு அங்கிருந்துகொண்டே போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்கிறார்.

மற்றொரு பக்கம் காயத்ரி ஒரு காப்பர் கம்பெனிக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தி அதில் ஜெயிக்க முடியாமல், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாலாவது மக்கள் திரும்பி பார்ப்பார்களா என முடிவெடுக்கிறார்.

அடுத்த பக்கம் நடிகர் காளி வெங்கட் தான் வேலை செய்யும் பள்ளிக்கூடத்தின் இடிந்து போன கட்டிடத்தை சரி செய்ய பணம் திரட்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தன் அக்காவின் குழந்தைகள் இருவரை அழைத்து கொண்டு சென்னை வருகிறார்.

மேலே குறிப்பிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு சமயத்தில் பாபி சிம்மா நடத்தி வரும் லாட்ஜில் தங்குகின்றனர். அவர்களுக்கு என்ன ஆனது. பாபி சிம்மாவை கொல்ல போலீஸ் பார்வதி போடும் திட்டம் ஜெயித்ததா என்பது தான் மீதி கதை.

க்ளாப்ஸ் & பல்ப்ஸ்:

நடிப்பில் பாபி சிம்மா தவிர மற்ற யாருக்கும் பெரிய அளவில் ஜொலிக்க வாய்ப்பே அளிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். அவர் கொடூர வில்லனாக நடிப்பில் அதகளம் செய்துள்ளார்.

போலீசாக வரும் பார்வதி உண்மையில் போலீஸ் தானா என்ற கேள்வியை கொண்டு வரும் அளவுக்கு காட்சிகள் மோசமாக தான் இருந்தன. எந்நேரமும் ஒரு டேபிளில் அமர்ந்து சில பைல்களை புரட்டிகொண்டிருக்கிறார். அந்த பைல்களில் உள்ள பேப்பர்களை பஞ்ச் செய்து கட்டிகூட வைக்கவில்லை - அந்த அளவுக்கு மோசமான காட்சியமைப்புகள்.

காளி வெங்கட், காயத்ரி இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். ஆனால் அவர்கள் கதாபாத்திரங்களில் அதிகம் அழுத்தம் இல்லை. காமெடிக்கு வரும் இருவரின் காமெடி சுத்தமாக எடுபடவில்லை.

அனைத்து கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி கதையை செட்டில் செய்வதற்குள் 5 எபிசோடுகள் முடிந்துவிடுகிறது. அதன் பிறகு ஓரளவுக்கு வேகமாக கதை ஓடினாலும், லாஜிக்கே இல்லாத பல காட்சிகள் பார்ப்பவர்களை சோதிக்கிறது.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் பார்வதி எதற்கு அவ்வளவு பெரிய ரௌடியை பிடிக்க தனியாக, வேறு ரவுடிகளை அழைத்துக்கொண்டு, தேவா இருக்கும் இடத்திற்கே செல்கிறார்? போலீசில் ஆட்களே இல்லையோ என தான் கேட்கத்தோன்றும்.

மொத்தத்தில் 'வெள்ள ராஜா' சீரியலை அதிகம் பொறுமை இருந்தால் ஒருமுறை பார்க்கலாம்.